சிங்க முகமூடி, சிசிடிவி மீது "ஸ்ப்ரே" "சிங்கிள்" ஆளாக 16 கிலோ நகைத் திருட்டு... காட்டிக் கொடுத்த ருத்ராட்சம்
வேலூர் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை திருட்டு வழக்கில், கடையின் பின்பக்கம் சிசிடிவி கேமராக்கள் இல்லாததால் ஒரு வாரமாக திருடன் சிறுகச் சிறுக துளையிட்டு உள்ளே நுழைந்தது தெரியவந்துள்ளது. சத்தம் வராமல் சுவற்றில் துளையிடுவது எப்படி என யூடியூபைப் பார்த்து தெரிந்துகொண்டு, சிங்கிள் ஆளாக களமிறங்கி சிங்க முகமூடி போட்டு திருடிய திருடன் சிக்கிய பின்னணியை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு..
வேலூர் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் 16 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் திருட்டு போன சம்பவத்தில், கடையின் பின்பக்க சுவரில் துளையிட்டு உள்ளே நுழைந்து, நகைகளை அள்ளிச் சென்ற திருடன் சிங்க முகமூடி அணிந்து திருடியது முதற்கட்டமாகக் கிடைத்த சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்தது. அதனைக் கொண்டு களமிறங்கிய தனிப்படை, பழைய முறைகளிலும் அறிவியல் பூர்வமாகவும் விசாரணையை முன்னெடுத்தது.
சம்பவம் நிகழ்ந்த ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையை ஆய்வு செய்த போலீசாருக்கு, கடையின் முன்பக்கம் மட்டுமே சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பதும் காவலுக்கு நிற்பவர்களும் முன்பக்கம் மட்டுமே கண்காணிப்பில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து நகைக்கடை அமைந்துள்ள பகுதியில் நான்கு திசைகளிலும் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை 24 மணி நேரமும் போலீசார் ஆய்வு செய்தனர். அதில் நகைக்கடைக்குப் பின்புறமாக ஒரு நபர் அடிக்கடி சென்று வந்தது தெரியவந்தது.
இதற்கிடையில் ஒடுக்கத்தூர் பகுதியில் புதிதாக வாடகை வீட்டிற்கு வந்தவன், அடிக்கடி அங்குள்ள மாயனப் பகுதிக்குச் சென்று வருவதாகக் கிடைத்த தகவலைக் கொண்டு அவனை மடக்கி போலீசார் விசாரித்த போது, சிசிடிவி கேமராக்களில் பதிவான அதே நபர் என்பது தெரியவந்தது. குச்சிப்பாளையத்தைச் சேர்ந்த டீக்காரமன் என்ற அந்தத் திருடன் சிக்கியதை தொடர்ந்து, மயானத்தில் அவன் புதைத்து வைத்திருந்த நகைகளும் சிக்கின.
ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் திருடத் திட்டமிட்ட டீக்காராமன், கடந்த ஒரு மாத காலமாக கடைப்பக்கம் சென்று நோட்டமிட்டு வந்துள்ளான். கடையின் பின்பக்கம் கேமராக்கள் இல்லாததும், காவலர்கள் அந்தப் பகுதிக்குச் செல்லாததும் அவனுக்குச் சாதகமானது.
இதனையடுத்து பின்பக்கச் சுவற்றில் துளையிட்டு உள்ளே நுழைய முடிவு செய்த டீக்காராமன், சத்தம் வராமல் சுவற்றில் துளையிடுவது எப்படி என்பதை யூடியூப் பார்த்து தெரிந்துகொண்டு, ஒரு வாரமாக சிறுகச் சிறுகத் துளையிட்டுள்ளான். இதில் இன்னொரு சுவாரசியமாக, டீக்காராமன் சிவபக்தன் என்பதும் அதனால் திருடிய நகைகளில் ஒரு ருத்ராட்ச மாலையை மட்டும் மற்ற நகைகளோடு சேர்த்து புதைக்காமல் கழுத்தில் அணிந்துள்ளான். அதுவே அவனை அடையாளம் காண உதவியதாக காவல்துறை துணைத் தலைவர் ஏ.ஜி.பாபு தெரிவித்தார்.
200க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து, 200க்கும் மேற்பட்ட செல்போன் பேச்சுகளையும் ஆய்வு செய்து, துப்பு கிடைத்த இடங்களுக்கெல்லாம் இரவு பகல் பாராமல் ஓடிச் சென்று விசாரணை மேற்கொண்டு ஐந்து நாட்களுக்குள் குற்றவாளியை கைது செய்து மொத்த நகைகளையும் மீட்ட தனிப்படை போலீசாரை உயரதிகாரிகள் வெகுவாக பாராட்டி சன்மானங்கள் வழங்கினர்.
இந்த சம்பவத்தில் குற்றவாளியை விரைந்து பிடிக்க பெரிதும் உதவியது சிசிடிவி கேமராக்கள்தான் என்று உறுதிபடத் தெரிவித்த டிஐஜி பாபு, வேலூர் மாவட்டத்திலுள்ள கேமராக்களின் தரத்தை மேலும் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகக் கூறினார்.
Comments